ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பரபரப்பான சாலையில் வீடியோ எடுப்பதற்காக கார் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கியதாக கூறப்படும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வைரலான வீடியோவில், கார் கதவைத் திறந்த நிலையில் அந்த பெண் டிரைவர் சீட்டில் அமர்ந்து கைபேசியில் வீடியோ பதிவு செய்வது தெரிகிறது. பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வழியின்றி நின்று, சைரன் தொடர்ந்து ஒலித்தபடியே இருந்ததாக காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை லோகேந்திர சர்மா என்பவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அவர், “ஆம்புலன்ஸ் சைரன் பின்னணி இசை அல்ல” என்ற தலைப்பில் பதிவிட்டு, “உங்கள் வீடியோ காத்திருக்கலாம்; இன்னொருவரின் உடல்நிலை காத்திருக்காது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட சமூக வலைதள பயனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், அவசர சேவை வாகனங்களுக்கு வழி விட வேண்டிய பொறுப்பு மற்றும் சாலையில் சமூக ஊடகப் பதிவுகளுக்காக செய்யப்படும் செயல்களின் ஆபத்து குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது.





