டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உலக நலனை மையமாக வைத்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் உச்சிமாநாடு செப் 12 மற்றும் 13 தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த அமைப்புக்கு இந்தியா நான்காவது முறையாக தலைமை ஏற்கிறது.
மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங், தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் பட்டா எல் சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்தோனேஷியா அதிபர் பிரபாவோ சுபியான்டோ பங்கேற்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல்நஹ்யான் கலந்து கொள்கிறார். பிரேசில் சார்பில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா பங்கேற்கிறார்.
செப் 11 அன்று வெளியிட்ட பதிவில், உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் டெல்லியில் ஒன்றுகூடுவார்கள் என்றும், உலக நலனை முன்னிறுத்தி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெறும் என தாம் உறுதியாக நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.





