பிலிப்பைன்ஸில் பயணிகள் சொகுசு கப்பலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி கடலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து, தலைநகர் மணிலாவில் இருந்து சுற்றுலா தலமான பலாவன் மாகாணத்தின் கொரோன் பகுதிக்குச் சென்ற ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற கப்பலில் நிகழ்ந்தது. கப்பலில் 117 பயணிகள் மற்றும் 17 ஊழியர்கள் என மொத்தம் 134 பேர் இருந்தனர்.

நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியதாகவும், அது கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது. தீயிலிருந்து தப்பிக்க பலர் கடலில் குதித்துள்ளனர்.

சிலர் மீட்கப்பட்ட நிலையில், 80க்கும் மேற்பட்டோர் இன்னும் கணக்கில் வரவில்லை. அவர்களைத் தேடும் பணியில் பிலிப்பைன்ஸ் கடற்படை ஈடுபட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த கீழ்த்தளப் பகுதியில் இருந்து பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக ஒரு உயிர்தப்பியவர் கூறியுள்ள நிலையில், தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.