பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஜே.ஏ.ஏ.சி. (கூட்டு அவாமி நடவடிக்கை குழு) அழைப்பு விடுத்த பொது பந்த் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதி மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாகவும், அந்த போராட்டங்களை ஜே.ஏ.ஏ.சி. முன்னெடுத்து ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டதாகவும், இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. மேலும், அங்கு நடக்கும் நடவடிக்கைகளை மறைக்க இணைய முடக்கம் மற்றும் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில், இந்த பொது வேலைநிறுத்தம் வணிகச் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கி விட்டது. முக்கிய வணிக மையங்கள், உள்ளூர் சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், முக்கிய சாலைகளும் பெரும்பாலும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.