காப்புரிமை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறியதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என ‘சரிகம’ நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இளையராஜா இசையமைத்த சில திரைப்பட பாடல்களின் உரிமை தங்களுக்கே என சரிகம நிறுவனம் வாதிடுகிறது. இதுதொடர்பான வழக்கில், கடந்த பிப்ரவரி 13 அன்று டில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து, சரிகம காப்புரிமை கொண்ட பாடல்களை இளையராஜா அல்லது அவரது பிரதிநிதிகள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
அந்த தடையை நீக்கக் கோரி இளையராஜா தாக்கல் செய்த மனு கடந்த ஜூலை 1 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்பாட்டிபை, யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களில் ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு தாமே உரிமையாளர் என கூறி இளையராஜா ஆட்சேபம் தெரிவித்து வருவதன் மூலம் நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறியுள்ளார் என சரிகம குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் முரட்டுக் காளை திரைப்படத்தில் இடம்பெற்ற “பொதுவாக எம்மனசு தங்கம்” பாடலின் உரிமை தமக்குரியது எனக் கூறி, அதை பயன்படுத்த தம்மிடமிருந்து உரிமம் அல்லது ஒப்புதல் பெற வேண்டும் என வலியுறுத்தி ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிறைத் தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள், சொத்துகளை பறிமுதல் செய்து விற்று கிடைக்கும் தொகையை நிறுவனத்திற்கு வழங்குதல், இதற்காக தனி அதிகாரியை நியமித்தல் ஆகியவற்றை சரிகம கோரியுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி அனூப் ஜெயராம் பம்பானி, சரிகம முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.





