செப்.12 முதல் டிரைவிங் லைசென்ஸ் (DL), வாகன பதிவு சான்றிதழ் (RC) ஆகியவற்றை பொதுமக்கள் தாங்களே டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் செப்.2 அன்று விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் விஜய், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் சுயமாக பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த புதிய நடைமுறை செப்.12 முதல் அமலுக்கு வரும் என அரசு அரசாணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய வாகனத்தின் பதிவு செயல்முறை முடிந்தவுடன், அதற்கான டிஜிட்டல் ஆர்சி சான்றிதழை இணையம் வழியாக நேரடியாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு முடிந்த அதே நாளில் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டிஜிட்டல் ஆவணங்களிலும் க்யூஆர் குறியீடு இடம்பெறும்; அதை ஸ்கேன் செய்வதன் மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மின்னணு முறையில் எளிதாக சரிபார்க்கலாம்.

இந்த டிஜிட்டல் சான்றிதழ்களை ஓராண்டுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்றும், க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி ஆவணத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.