சென்னை: பொது வினியோகத் திட்டத்தின் (PDS) கீழ் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களை எடை குறைத்து வழங்கும் பணியாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில இடங்களில் எடை குறைவாக வழங்குவது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, அவற்றை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனத் துறை தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா வெளியிட்ட சுற்றறிக்கையில், மண்டலத்தில் உள்ள பொது வினியோகத் திட்ட சார் பதிவாளர்கள் வழியாக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, கார்டுதாரர்களுக்கு குறைபாடின்றி சரியான அளவில் பொருட்களை வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் தொடர்ச்சியாகவும் வார அடிப்படையிலும் திடீர் ஆய்வு நடத்தி, தராசுகளின் துல்லியத்தன்மை மற்றும் வினியோகப் பொருட்களின் எடையைத் தணிக்கை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதோடு, அவர்கள்மீது கடும் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக மளிகைப் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது; விருப்பத்திற்கேற்ப வழங்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தினேஷ்குமார், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக பொருட்கள் அனுப்பப்படுவதாகக் கூறி, பணியாளர்களை மட்டும் குறிவைக்கும் ஒருதலைப்பட்ச சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.





