வாஷிங்டன்: வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க பார்லிமென்ட் (பிரதிநிதிகள் சபை, செனட்) தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால், ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் தலா 5,000 டாலர் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய அவர், நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தின் நடுப்பகுதியில் நடைபெறும் இந்த இடைக்காலத் தேர்தல், அதிபர் மீதான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் தேர்தலாக இருக்கும் என்ற பின்னணியில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

அறிக்கையின் படி, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததுடன் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரானுடன் ஏற்பட்ட போர் காரணமாக எரிபொருள் செலவுகள் அதிகரித்தது மக்களிடையே அதிருப்தி மற்றும் கோபத்தை உருவாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பில் ஒரு நிபந்தனையையும் டிரம்ப் வைத்துள்ளார். வழங்கப்படும் தொகையை வெளிநாடுகளுக்குச் சென்று செலவிடக் கூடாது; அமெரிக்காவுக்குள் மட்டுமே செலவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவரும் முயற்சி என்றும், மக்களுடன் “பேரம்” பேசுவது போல இருப்பதாகவும் விமர்சித்துள்ளன.

இதற்கு முன்பும் வெளிநாடுகளில் இருந்து வரும் வரி வருவாயில் இருந்து ஒருவருக்கு 2,000 டாலர் வழங்குவதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அது அறிவிப்பாகவே முடிந்ததாகவும் அந்த அறிக்கை நினைவூட்டுகிறது.