சென்னை: காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்.6ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெற்றிவாய்ப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாமக தலைமையுடன் தவெக ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் தவெக சார்பில் போட்டியிடுகின்றனர். தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், பிரசாரத்திலும் ஈடுபடத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

மதுராந்தகம் தனித் தொகுதி என்றாலும் வன்னியர் சமுதாய வாக்குகள் கணிசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் பாமக வாக்குகள் உதவியதால் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் எளிதில் வென்றதாக தவெக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் இடைத்தேர்தலில் பாமக நிலைப்பாடு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தவெக தரப்பில், இரண்டு அமைச்சர்கள் பாமக தலைமையுடன் தொடர்ந்து பேசுவதாக தகவல். பாமக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளில் சிலர் தவெக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டினாலும், கூட்டணியில் வி.சி.க. இருப்பது அவர்களுக்கு நெருடலாக இருந்து, வெளிப்படையான ஆதரவு அறிவிப்பில் சிக்கல் உருவாகிறது என கூறப்படுகிறது.

இதன் மாற்று ஏற்பாடாக, அ.தி.மு.க.க்கு ஆதரவு அளிக்காமல் தேர்தலை புறக்கணிக்கும் நிலைப்பாட்டை பாமக எடுக்க வேண்டும் என்ற கோணத்தில் பேச்சு நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மரகதம் குமரவேல் பதவி விலகியபோது கடுமையாக விமர்சித்த அன்புமணி, மீண்டும் போட்டியிட்டால் தோற்கடிப்போம் என கூறியிருந்ததால், பாமக இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.