வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக வெளியிட்டதாக கூறப்படும் ஒரு விளம்பரம், இனவெறி குற்றச்சாட்டுகளுடன் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
டிரம்ப் பதவியேற்றதிலிருந்து குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டு, ஆவணமில்லா குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை, ஹாலிவுட் படமான டிரான்ஸ்பார்மர்ஸ் பாணியில் ஒரு விளம்பரத்தை தயாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், அமெரிக்க சின்னத்துடன் காட்டப்படும் ‘ஆப்டிமஸ் பிரைம்’ கதாபாத்திரம், தாடியுடன் இந்தியர் போன்ற தோற்றமுடைய ஒருவரை எதிர்கொள்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என்பதுடன், “மிஸ்டர் சிங்” என குறிப்பிட்டு வண்டி ஓட்டத் தெரியாது என கேலி செய்யும் வாசகங்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பெரிய டிரக்குகளை இயக்கும் டிரைவர்களில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள நிலையில், இந்த விளம்பரம் சீக்கியர்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிரான முன்வெறுப்பை தூண்டும் வகையில் இருப்பதாக இந்திய, ஹிந்து மற்றும் சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.





