தமிழக முதல்வராக விஜய் தேர்வானதில் “மிகவும் மகிழ்ச்சி” என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஊக்குவிக்க முதல்வர் விஜய் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப்பயணமாக விஜய் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளார். லண்டனில் இருக்கும் அவர், செப்.12 அன்று நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டியை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து அளித்த பேட்டியில், தனது அழைப்பின் பேரில் பரபரப்பான பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி விஜய் லண்டன் வந்ததாக அஜித் தெரிவித்தார். லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத் தொடரை தொடங்கி வைக்கவே அவர் வந்ததாகவும், கடந்த 34 ஆண்டுகளாக இருவரும் திரைத்துறையில் சக நடிகர்களாக இருப்பதாகவும் அஜித் குறிப்பிட்டார்.
மேலும், விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதில் விஜய் அதிக கவனம் செலுத்துவதாகவும், குறிப்பாக மோட்டார் ஸ்போர்ட்ஸை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இந்தியாவிலும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர வேண்டும் என்றும், லண்டனில் நடப்பதைப் போல சென்னையிலும் போட்டிகள் நடைபெற வேண்டும் என்றும் அஜித் விருப்பம் தெரிவித்தார்.





