சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ரூ.14.98 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை அரசை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி அணையுடன் தொடர்புடைய 2 மற்றும் 3ம் மண்டல பாசன வாய்க்கால்களை தூர்வார சிறப்பு பணிகள் மேற்கொள்ளும் முன்மொழிவு பரிசீலனையில் இருப்பதாக, நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில் தெரிவித்திருந்ததை நினைவூட்டினார். இந்தத் திட்டம் 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களை உள்ளடக்கி, ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் முன்வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், பணிகளும் தொடங்கப்படவில்லை என அண்ணாமலை தெரிவித்தார். இந்த நிலையில், நேற்று விவசாயிகள் வாய்க்கால் பாசன அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பாசனத்தை நம்பி சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளதாக கூறிய அவர், தூர்வாரும் பணிகள் நடைபெறாவிட்டால் வறட்சி மற்றும் குறைந்த மழை சூழலில் கடைமடை பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகும் என எச்சரித்தார். நிதி ஒதுக்கப்பட்ட பிறகு பணிகளை தொடங்கி முடிக்க குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும் என்பதால், உடனடியாக நிதியை விடுவித்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.





