அசாமின் நகாவ்ன் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேபாஷிஷ் சர்மாவை பா.ஜ.க. வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் நகாவ்ன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பிரத்யுத் போர்டோலோய் வெற்றி பெற்றார். பின்னர் அவர் பா.ஜ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் திஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; இதையடுத்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் நகாவ்ன் தொகுதி காலியானது.
இந்நிலையில், நகாவ்ன் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய தேபாஷிஷ் சர்மா செப்டம்பர் 3-ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். செப்டம்பர் 8-ஆம் தேதி பா.ஜ.க.வில் இணைந்த அவர், சில நாட்களிலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
1992 அசாம் கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சர்மா, ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும் மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
மேலும், அசாமின் முன்னாள் கவர்னர் எஸ்.கே. சின்ஹாவின் சிறப்பு அதிகாரியாகவும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அசாம் பவனின் குடியிருப்பு ஆணையராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.





