பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷீ ஜின்பிங் டில்லி வர உள்ள நிலையில், இந்தியா–சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை சுமுகமாக கையாள்ந்து, இருதரப்பு உறவுகளை நீண்டகால பார்வையில் அணுக வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.

டில்லியில் நாளை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடியை ஷீ ஜின்பிங் சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சந்திப்பு இந்தியா–சீனா உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது மோடியும் ஷீ ஜின்பிங்கும் நேரில் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சீனாவின் தியான்ஜினிலும் இருவரும் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி–ஷீ சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், இரு தலைவர்களும் வழங்கியுள்ள துாதரக வழிகாட்டுதலின் அடிப்படையில் சீனா செயல்படும் என்றார். மேலும், தகவல் தொடர்பை அதிகரித்து ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், கருத்து வேறுபாடுகளை முறையாக கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நல்ல அண்டை நாடுகளாக நட்புறவை பேணுவதோடு, ஒருவருக்கொருவர் வெற்றி பெற உதவும் வகையில் இந்தியாவும் சீனாவும் செயல்பட வேண்டும் எனவும் மாவோ நிங் கூறினார்.