சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலையில் இன்று (செப்.12) ‘தினமலர்’ பவள விழா நடைபெறுகிறது. இந்த விழாவை தினமலர் நாளிதழும், எஸ்.ஆர்.எம். பல்கலையின் தமிழ்ப்பேராயம் அமைப்பும் இணைந்து நடத்துகின்றன.
விழாவை முன்னிட்டு கடந்த செப்.5 அன்று சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நினைவு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
இன்றைய விழா எஸ்.ஆர்.எம். வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் சிற்றரங்கத்தில் நடைபெறுகிறது. பல்கலை வேந்தர் பாரிவேந்தர் தலைமை வகிக்கிறார். காலை 9:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் விழாவில், தமிழ்ப்பேராயம் தலைவர் கரு. நாகராசன் வரவேற்புரை ஆற்றுகிறார்; எழுத்தாளர் இந்துமதி வாழ்த்துரை வழங்குகிறார்.
காலை 10:30 மணிக்கு “ஒரு பத்திரிகையால் என்ன சாதிக்க முடியும்; அதில் ‘தினமலர்’ என்ன சாதித்திருக்கிறது” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் கருத்துரை வழங்குகிறார். தொடர்ந்து 11:15 மணிக்கு “தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை கட்சி சார்ந்ததா, சாராததா” என்ற தலைப்பில் அரசியல் அரங்கம் நடைபெறுகிறது. வழக்கறிஞர் சுமதி ஒருங்கிணைக்கும் இந்த அரங்கில் த.வெ.க. முதன்மை செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், தி.மு.க. கொள்கை பரப்பு செயலர் சபாபதி மோகன், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஆ. கோபண்ணா, பா.ஜ.க. மாநில செயலர் அஸ்வத்தாமன் ஆகியோர் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
பகல் 12:00 மணிக்கு “தினமலரும் நானும்” என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றுகிறார். பின்னர் 12:30 மணிக்கு ‘தினமலர்’ நாளிதழின் இணை ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி பங்கேற்கும் வாசகர்களுடன் நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.





