சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக அமைக்கப்படும் விநாயகர் சிலை பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் விழாவை மறைமுகமாக முடக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என குற்றம்சாட்டினார். பக்தி உணர்வுடன் அமைக்கப்படும் வழிபாட்டு பந்தல்களுக்கு தற்காலிக மின் இணைப்புக்காக ரூ.4,000 டிபாசிட் செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஒயரிங் உள்ளிட்ட பணிச்செலவுகளை சேர்த்தால் ஒரு விநாயகர் சிலை அமைப்பதற்கான மின் இணைப்பு செலவு ரூ.15,000 வரை உயரக்கூடும் என தெரிவித்தார்.

ஆந்திராவில் எந்த தடையுமின்றி அரசே இலவச மின்சாரம் வழங்கி பக்தர்களை உற்சாகப்படுத்துகிறது என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் வணிக கட்டண முறையை ரத்து செய்து, விநாயகர் சதுர்த்தி பந்தல்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.