அறநிலையத்துறை ஈடுபாடு குறித்து நீதிமன்றக் கேள்வி
மதுரை திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) ஏன் தொடர்புபடுகிறது என, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வியாழக்கிழமை அதிருப்தியுடன் கேள்வி எழுப்பியது.
ரமேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணையில் இந்தக் கருத்து வெளிப்பட்டது. இதற்கு முன் இரு நீதிபதிகள் அமர்வு, மத்திய தொல்லியல்துறையுடன் (ASI) இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் மலையை அளவீடு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுத்து, பணி முடிந்ததும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அறநிலையத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், அந்த அளவீட்டு உத்தரவுக்கு எதிராக அறநிலையத்துறை கமிஷனர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாக தெரிவித்தார். மேலும், நிலுவையில் உள்ள அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்து அங்கு வாதங்களை முன்வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாகவும் கூறினார்.
மொத்த மலையையும் அளவிடுவது சாத்தியமில்லை என்றும், மனுதாரர் கேட்ட நிவாரணத்தைத் தாண்டி முன் உத்தரவு சென்றுள்ளதாகவும் அவர் வாதிட்டார். இதனால், அறநிலையத்துறை சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு, கோவிலின் நலன் கருதி அதன் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் உத்தரவு வழங்கியதாக குறிப்பிட்டது. இந்த விவகாரம் கோவில், தர்கா மற்றும் தொல்லியல்துறை தொடர்புடையதாக இருக்கையில், அறநிலையத்துறைக்கு இதில் என்ன வேலை எனவும் கேள்வி எழுப்பியது. இடையீட்டு மனுவுக்காக அவகாசம் அளித்து வழக்கை செப்.25க்கு ஒத்திவைத்தது.





