புதுடில்லி: டெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள ஒரு சொகுசு கவச லிமோசின், பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பை ஏற்று வந்துள்ள ஜின்பிங், இன்று மாலை பிரதமரை சந்தித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் பயணங்களில் மேற்கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போலவே, ஜின்பிங்கும் தனிப்பட்ட பாதுகாப்பு வாகனத்துடன் இந்தியா வந்துள்ளார். சீன அதிபருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘Hongqi N701’ லிமோசினில்தான் அவர் பயணம் செய்கிறார்; இதே மாடல் எகிப்து, அமெரிக்கா, ரஷ்யா, ஹாங் காங் உள்ளிட்ட பயணங்களிலும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

‘ரெட் பேனர்’ என அழைக்கப்படும் சீனாவின் Hongqi சொகுசு பிராண்ட், இந்தியாவில் ஒருகாலத்தில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் பெற்றிருந்த மதிப்புக்கு ஒப்பானதாக குறிப்பிடப்படுகிறது. N701 கார் சுமார் 5.5 மீட்டர் நீளமுள்ளதாகவும், இதேபோன்ற Hongqi L5 லிமோசின் மாடல் பிரதமர் மோடியின் 2025 சீனா பயணத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

N701 காரில் 21 இன்ச் புல்லட் ப்ரூப் வீல்கள், புல்லட் ப்ரூப் கண்ணாடி மற்றும் மிக வலுவான வெளிப்புற கவச பிளேட்டிங் உள்ளதாக கூறப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதலை தாங்கும் திறன் மற்றும் ரசாயனத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க காற்று அழுத்த அமைப்பு போன்ற வசதிகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனத்தில் 6.0 லிட்டர் V12 இன்ஜின் இருப்பதாகவும், அது சுமார் 408 ஹெச்பி சக்தியை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபரின் ‘தி பீஸ்ட்’ எனப்படும் கவச லிமோசினுடன் இதன் அம்சங்கள் ஒப்பிடப்பட்டாலும், அதே அளவிலான ஒருங்கிணைந்த அமைப்புகள் N701-ல் உள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.