புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக தளங்களில் வாங்கும் நுகர்வோரின் உரிமைகளை வலுப்படுத்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்த விதிகள், போலியான தள்ளுபடி அறிவிப்புகள், குறிப்பிட்ட பிராண்டுகள் அல்லது விற்பனையாளர்களுக்கு சாதகமாக தேடல் முடிவுகளை மாற்றுவது, மறைமுக கூடுதல் கட்டணங்கள், நுகர்வோர் தரவு பயன்பாடு போன்ற நடைமுறைகளை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு இ-காமர்ஸ் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025-ல் வந்த 17.71 லட்சம் புகார்களில் 5.13 லட்சம் புகார்கள் ஆன்லைன் வர்த்தகத்தை சார்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படும் போது தற்போதைய விலையுடன் “முந்தைய விலையும்” தெளிவாக காட்டப்பட வேண்டும். “முந்தைய விலை” என்பது கடந்த 30 நாட்களில் அந்தப் பொருள் விற்பனை செய்யப்பட்ட குறைந்தபட்ச விலையாக இருக்க வேண்டும்; விற்பனைக்கு முன் விலையை உயர்த்தி பின்னர் பெரிய தள்ளுபடி காட்டும் ஏமாற்றுகளைத் தடுப்பதே நோக்கம்.

மேலும், நுகர்வோர் முடிவுகளை பாதிக்கும் வகையில் தேடல் முடிவுகளை செயற்கையாக மாற்றுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தளத்தின் சொந்த தயாரிப்புகள் அல்லது குறிப்பிட்ட விற்பனையாளர்கள்/பொருட்களுக்கு நியாயமற்ற முன்னுரிமை அளிக்கக் கூடாது; பணம் செலுத்தி முன்னிலைப்படுத்தப்படும் பொருட்கள் காட்டப்படும் போது அது “விளம்பரம்” என்பதை தெளிவாகவும் முக்கியமாகவும் குறிப்பிட வேண்டும்.

‘டார்க் பேட்டர்ன்’ குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை தளத்தை சுய தணிக்கை செய்து விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, தணிக்கை சான்றிதழை இணையதளம் அல்லது செயலியில் காட்சிப்படுத்த வேண்டும். மேலும், வாங்கும் முன் காலாவதி தேதி, ரிட்டர்ன்/ரீபண்ட் விதிகள், உத்தரவாதம், டெலிவரி மற்றும் பணம் செலுத்துதல் விவரங்கள் உள்ளிட்டவை தெளிவாக வழங்கப்பட வேண்டும்; விலையுடன் சேர்த்து இறுதியாக செலுத்த வேண்டிய மொத்த தொகையும் வெளிப்படையாக இருக்க வேண்டும்; நுகர்வோர் தரவை பயன்படுத்த வெளிப்படையான மற்றும் உறுதியான ஒப்புதல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.