புதுடில்லி: 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட எச்.பி.வி. தொடர்புடைய புற்றுநோய்களைத் தடுக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் தடுப்பூசி திட்டத்தில், தடுப்பூசி பெற்றோர் எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எச்.பி.வி. (Human Papillomavirus) தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம், பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட தொடர்புடைய புற்றுநோய்களைத் தடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் முதன்மை சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘கார்டசில்-4’ என்ற ஒற்றை டோஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதுடன், பெற்றோர் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.20 கோடி சிறுமிகள் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் தங்களின் இலக்கை 100 சதவீதம் எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மேலும், பீஹார், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்கள் 90 சதவீத இலக்கை எட்டியுள்ளன என்றும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் 60 சதவீதத்திற்கும் மேல் இலக்கை கடந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.