குமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கி இன்று தமிழகம் முழுவதும் பரவி பெரிய நிறுவனமாக வளர்ந்திருப்பது ‘தினமலர்’ நாளிதழுக்கான பெருமை என எழுத்தாளர் ஜெயமோகன் சனிக்கிழமை தெரிவித்தார். இதை குமரி மாவட்ட மக்களின் பெருமையாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘தினமலர்’ 75வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, ‘தினமலர்’ மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலையின் தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்திய நிகழ்ச்சி காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலையில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் சிற்றரங்கத்தில் நடைபெற்றது. பல்கலை வேந்தர் பாரிவேந்தர் தலைமை வகித்தார்.
“ஒரு பத்திரிகையால் என்ன சாதிக்க முடியும்; அதில் ‘தினமலர்’ என்ன சாதித்திருக்கிறது” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கிய ஜெயமோகன், பொதுவாக பெரிய மேடை நிகழ்ச்சிகளில் அரிதாகவே பங்கேற்பதாகவும், ஆண்டுக்கு சில மேடைகளில் மட்டுமே பேசுவதாகவும் கூறினார்.
இன்றைய சூழலில் பலர் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற தளங்கள் வழியாக செய்திகளை நுகர்கிறார்கள் என்றும், இதுபோன்ற காலகட்டத்தில் நாளிதழ்கள் போராட வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் செய்திகளுக்கான பொறுப்பு இதழுக்கே இருப்பது, நிருபர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களுக்கு தனித்த அடையாளம் இருப்பது போன்ற அம்சங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாளிதழ் என்பது பெரிய செய்திகளின் தொகுப்பு மட்டுமல்ல; நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான செய்திகளின் சேர்க்கை என்றும், சிறிய விஷயங்களும் செய்தியாக மதிப்பிடப்பட வேண்டும் என்ற புரிதலை ‘தினமலர்’ வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். 75 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி, பல்வேறு உள்ளடக்கங்களுக்கு இடமளிக்கும் பன்முகத் தன்மை எதிர்காலத்தை சந்திக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.





