புதுடில்லி பாரத் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தென்னாப்ரிக்கா, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

தலைவர்களை வரவேற்று பேசிய பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டை தலைமையேற்று நடத்துவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். நிலையான வளர்ச்சியே இந்தியாவின் தாரக மந்திரம் என்றும், மக்கள் நலனும் மனிதாபிமானமும் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைப்பு செயல்படுகிறது என்றும் மோடி கூறினார். பிரிக்ஸ் யாருக்கும் எதிரானது அல்ல; அமைப்பை மேலும் வலுப்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும், ஐநா பொதுச்சபையில் தாமதமின்றி சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், கடல்வழி வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறினார். கப்பல் மாலுமிகளின் பாதுகாப்பை “எவ்வளவு விலை கொடுத்தாவது” உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலகளாவிய நெருக்கடிகளில் வளர்ந்து வரும் நாடுகள் முதலில் பாதிக்கப்படினும் முடிவெடுப்பில் பின்வரிசையில் நிற்கும் நிலை மாற வேண்டும்; விதிமுறைகளைப் பின்பற்றுபவர்களாக அல்ல, விதிமுறைகளை உருவாக்குபவர்களாக வளர்ந்து வரும் நாடுகள் மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர ‘பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமும் முன்னேற்றத்திற்கான ஒரே வழி’ என்ற மைய கருத்துடன் ‘பிரிக்ஸ் டில்லி பிரகடனம்’ ஏற்கப்பட்டது. எந்த உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் பிரகடனம் ஏற்கப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். பிரிக்ஸ் 20 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி சிறப்பு தபால் தலைகளையும் அவர் வெளியிட்டார்.