ஸ்ரீநகர்
தேசியப் பாடலான வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்படுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்து, “காஷ்மீரிகள் சிறை செல்ல வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறதா?” என்று ஜம்மு–காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளையும் கட்டாயம் பாட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக காங்கிரஸ் “முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடுவோம்” என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
யூனியன் பிரதேசமான ஜம்மு–காஷ்மீரில், ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. ஸ்ரீநகரில் சமீபத்தில் நடந்த ஜம்மு–காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழாவில் வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்பட்டதற்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், வந்தே மாதரம் பாடலுக்கு சட்டம் இயற்றி சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவமதிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஒமர் தெரிவித்தார். மேலும், அனைத்து பத்திகளையும் பாட வேண்டும் என்ற விதி ஜம்மு–காஷ்மீருக்கு மட்டும் அல்ல; நாடு முழுவதும் பொருந்தும் என்றும், அதை மீறினால் தண்டனை உறுதி என்றும் அவர் கூறினார்.
அப்படியிருக்கையில், காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாடு போலவே காஷ்மீரிகள் பாடலை அவமதித்து சிறை செல்ல வேண்டும் என அந்தக் கட்சி விரும்புகிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.





