பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு ரஷ்யா பங்களிக்கத் தயாராக இருப்பதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா அச்சுறுத்தவில்லை; இனியும் அச்சுறுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார். ஐரோப்பாவுடன் மோதலுக்கு ரஷ்யாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின் விளைவாக உருவான பிரச்னைகள் தீர்க்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், பிரிக்ஸ் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்றும் வலியுறுத்தினார்.

மேலும், உலகம் முழுவதுடனும் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக இருப்பதாகவும், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் புடின் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா சுதந்திரமான, இறையாண்மைமிக்க கொள்கையைக் கொண்டுள்ளதாகவும், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரத்தில் ஜி7 நாடுகளின் பங்கு பல ஆண்டுகளாகக் குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.