புதுடில்லி: டில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், ‘பறக்கும் கிரெம்ளின்’ என குறிப்பிடப்படும் தனது சிறப்பு விமானத்தில் வந்துள்ளார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, அவர் ரஷ்யாவில் பயன்படுத்தும் ‘ஆரஸ் செனாட்’ என்ற அதிநவீன கவச கார் டில்லிக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக புடின் இருந்து வருவதால், பல்வேறு உளவு அமைப்புகள் அவரை குறி வைப்பதாக கூறப்படுகிறது. இதனால் விமானம், வாகனம் உள்ளிட்ட பயண ஏற்பாடுகளில் பிரத்யேக பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
‘சக்கரங்களின் கோட்டை’ என அழைக்கப்படும் ஆரஸ் செனாட், ரஷ்ய அரசின் கோர்டெஷ் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. ‘ஆரஸ் மோட்டார்ஸ்’ நிறுவனம், ரஷ்ய அரசு ஆராய்ச்சி நிறுவனம் என்ஏஎம்ஐ, சோலர்ஸ் ஜேஎஸ்சி மற்றும் யுஏஇயின் தாவாஜூதின் ஹோல்டிங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இதை தயாரித்துள்ளது. பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பதிப்பின் மதிப்பு இந்திய ரூபாய் கணக்கில் சுமார் 2.50 கோடி ரூபாய்; அதே நேரத்தில் புடினுக்கான வாகனத்தில் ராணுவ தர பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2018-ல் அறிமுகமான இந்த லிமோசின், சோவியத் கால ‘ZIS-110’ வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது. ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 4.4 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜின் (598 குதிரைத்திறன், 880 Nm டார்க்), மணிக்கு 160 கிமீ அதிகபட்ச வேகம் மற்றும் சுமார் 9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் ஆகியவை இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், மேம்பட்ட பிரேக்கிங் அமைப்புகள், பல அடுக்கு குண்டுத் துளைக்காத கண்ணாடிகள், தடிமனான ஸ்டீல் பிளேட்டிங் போன்றவை வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. டயர்கள் பஞ்சர் ஆனாலும் அல்லது வெடித்தாலும் தொடர்ந்து பயணிக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பான தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் காலநிலைக்கு ஏற்ப சொகுசு இருக்கைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புடின் வந்த விமானம் ‘பறக்கும் கிரெம்ளின்’ அல்லது ‘அழிவு நாள் விமானம்’ என குறிப்பிடப்படும் இல்யூஷின் வகை விமானம் என கூறப்படுகிறது. ஒரே மாதிரியான இரண்டு விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில், எதிரிகள் எந்த விமானத்தில் அவர் பயணிக்கிறார் என்பதை கண்டறிய முடியாத வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1980களில் தயாரிக்கப்பட்ட இந்த வகை விமானங்கள், அவசர சூழ்நிலைகளில் நடமாடும் கட்டளை மையமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. அவியாட்விகேட்டல் பிஎஸ்-90ஏ டர்போபேன் இன்ஜின்களுடன், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கிலோமீட்டர் வரை தடையின்றி பறக்கும் திறன் கொண்டதாகவும், ரேடார் ஜாமிங் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான தகவல் தொடர்பை பராமரிக்கக்கூடிய அமைப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.





