இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோலி, பீல், மேக்வார் போன்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகள் அடிக்கடி காணாமல் போவதாகவும், பின்னர் அவர்களுக்கு கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இத்தகைய திருமணங்கள் சட்டவிரோதம் என சிறுபான்மையினர் நல அமைப்புகள் வலியுறுத்தினாலும், சம்பவங்கள் தொடர்வதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், சிந்து மாகாணத்தின் டாண்டோ அல்லாயார் மாவட்டத்தில் 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஹிந்து சகோதரிகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சீதா, ரூபி என குடும்பத்தினர் கூறும் இந்த இரு சிறுமிகளையும் கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்து வைத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இரு சிறுமிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்கள் அழுதபடியே வீட்டுக்குச் செல்ல வேண்டும் என கெஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்றம் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டதாக தகவல்.
இந்த நீதிமன்றக் காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அடுத்த நாளே 14 வயதான பன்சி கோலி என்ற மற்றொரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் மாதம் தொடங்கி முதல் 10 நாட்களில் ஆறு ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.





