தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ததற்கான கட்டாய தகவல்களை அரசியல் கட்சிகள் வெளியிடாத மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

ஏடிஆர் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, கடந்த ஏப்ரலில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 8,848 பேர் போட்டியிட்டனர். இதில் 31 அரசியல் கட்சிகள் சார்பில் 3,539 பேர் களமிறக்கப்பட்டனர். மொத்தமாக 1,405 வேட்பாளர்களுக்கு குற்றவியல் வழக்குகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான காரணங்களை, தேர்வு செய்யப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று 2020-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த காரணங்கள் தகுதி, சாதனை, திறன் போன்ற அடிப்படைகளில் இருக்க வேண்டும்; வெற்றி வாய்ப்பை மட்டும் காரணமாகக் காட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், குற்றப்பின்னணி இல்லாத ஒருவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதையும் விளக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அறிக்கையில், 1,214 வேட்பாளர்களுக்கான காரணங்களை கட்சிகள் வெளியிட்டிருந்தாலும், 191 பேருக்கான விவரங்கள் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 72 பேருக்கான தகவல் வெளியிடப்படாததால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது; அடுத்ததாக மேற்கு வங்கத்தில் 55 பேருக்கான விவரங்கள் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மேலும் தமிழகத்தில் பா.ஜ., அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்புகளில், வார்த்தைக்கு வார்த்தை ஒரே மாதிரியான காரணங்களை பயன்படுத்தியிருந்ததாகவும் ஏடிஆர் குறிப்பிட்டுள்ளது.