மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் அமைதியை மீட்டெடுக்க பிரிக்ஸ் உறுப்புநாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் சீனா இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றிய அவர், அந்தப் பகுதியில் நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காண அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றார். மேற்காசியாவில் நடைபெறும் போர் அப்பகுதி மக்களுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மோதல் சர்வதேச சமூகத்தின் பொதுநலன்களுக்கு ஏற்றதல்ல என்றும், உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், “வரலாற்றின் சரியான பக்கத்தில்” பிரிக்ஸ் நாடுகள் உறுதியாக நிற்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதியில் அமைதியை அடைய உறுப்புநாடுகளுடன் ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் ஜின்பிங் கூறினார்.





