பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்த மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தனது பயணத்தின் போது ஹிந்தி பாடல் ஒன்றை பாடியதன் மூலம் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பயணம் தொடர்பாக அன்வர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பியானோ கலைஞர் இசையமைத்துக் கொண்டிருந்ததை கவனித்த அவர், தொடர்ந்து கிஷோர் குமாரின் “க்வாப் ஹோ தும் யா கோயி ஹகீக்கத்” என்ற பாடலை பாடினார்.

இந்தப் பாடல் 1965ஆம் ஆண்டு வெளியான டீன் தேவியான் திரைப்படத்தில் இடம்பெற்றது. எஸ்.டி. பர்மன் இசையமைத்திருந்தார்; மஜ்ரூஹ் சுல்தான்புரி பாடல்வரிகளை எழுதியிருந்தார்; தேவ் ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதற்கு முன்பும் அன்வர், கபி குஷி கபி கம் திரைப்படத்தில் இடம்பெற்ற “போலே சூடியான்” பாடலை பாடிய வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.