சென்னை: தேசியம் என்ற கொள்கையில் ‘தினமலர்’ நாளிதழ் உறுதியாக பயணிக்கிறது; நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான செய்திகளில் சமரசம் செய்யாத பத்திரிகை என பா.ஜ.க. தமிழக செயலர் அஸ்வத்தாமன் தெரிவித்தார்.
‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை கட்சி சார்ந்ததா, கட்சி சாராததா’ என்ற தலைப்பில் பேசிய அவர், தேசிய பாதையில் ஒரு அங்குலம் கூட வழுவாமல் இதழ் செயல்படுகிறது என்றார். காங்கிரஸ் தமிழக துணைத் தலைவர் கோபண்ணா கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டி, தேசியத்திலிருந்து விலகியது காங்கிரஸ்தான் எனவும், தேசியம் பேசுபவர்கள் பா.ஜ.க.வுடன் தொடர்புபடுத்தப்படுவதற்கு காரணம் அந்தக் கட்சி தேசியக் கொள்கையில் வலுவாக இருப்பதால்தான் எனவும் கூறினார்.
மேலும், நாடு முழுவதும் கிளைகள் இருப்பதால் மட்டும் ஒரு கட்சி ‘தேசியக் கட்சி’ ஆக முடியாது; கொள்கையில் தேசியம் இருந்தால்தான் அது சாத்தியம் என அவர் விளக்கினார். ‘தினமலர்’ மீது அரசியல் சார்பு குற்றச்சாட்டு எழும்பும்போது அது பா.ஜ.க. ஆதரவு என்ற விமர்சனமாக மாறுவதாக குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் பா.ஜ.க.க்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் செய்திகளும் ‘தினமலர்’ மூலம் வரும் என கூறி, கட்சிக்குள் அதற்கு எதிர்வினை உருவாகும் என்றும் தெரிவித்தார்.
வாசகர்கள் விரும்புவது மட்டுமல்ல, அவர்கள் படிக்க வேண்டியதையும் வழங்க வேண்டும்; அதை ‘தினமலர்’ செய்கிறது என அவர் கூறினார். விளம்பரத்திற்காக செய்தியை வடிவமைப்பது போன்ற அணுகுமுறையை இதழ் எடுத்ததில்லை என்றும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை முன்னிட்டு, 75 ஆண்டுகால பத்திரிகை காப்பகத்தை பதிவு செய்து, அதை மொபைல் செயலியாக மாற்றி, செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய உதவும் வகையில் ‘தினமலர்’ தங்களுக்கென ஒரு ஏ.ஐ. அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





