புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு இரவு விருந்தளித்தார்.
இந்த விருந்தில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான், சர்பானந்த சோனோவால், அர்ஜுன் ராம் மேத்வால் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஒரே பஸ்ஸில் பாரத் மண்டபத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
விருந்தின்போது இந்தியா மற்றும் பிற பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து ‘பிரிக்ஸ் சிம்பொனி’ என்ற கலை நிகழ்ச்சியை வழங்கினர்.
இதனிடையே, விருந்தின் மெனு பட்டியல் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. ஸ்டார்ட்டர் வகைகளில் ‘கண்ட்வி மில்லே - பியூய்’ மற்றும் ‘கும்ப் கலோதி’ இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
முதன்மை உணவில் பன்னீர் லபாப்தார், குச்சி மர்மிக், கேரட்-பீன்ஸ் பொரியல், தக்காளி ‘பெல்லே சாரு’, தினைப் புலாவ், பீட்ரூட் ராய்தா ஆகியவை இருந்தன. இனிப்பாக பழைய டில்லி பழக் க்ரீமுடன் ஜிலேபி மற்றும் ‘ஷாத்துத் பிர்னி’ பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





