டில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பொது நாணயம் அறிமுகம் குறித்து விவாதிக்க எந்தவொரு முன்மொழிவும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
18வது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இதில் இந்தியா, ரஷ்யா, சீனா, ஈரான், பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, யுஏஇ, சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாளில் “பிரிக்ஸ் டில்லி பிரகடனம்” நிறைவேற்றப்பட்டது.
உலக அமைதி, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தையும் பயன்பாட்டையும் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை “டி-டாலரரைசேஷன்” என குறிப்பிடப்படும் முயற்சிகளாக பிரிக்ஸ் நாடுகள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றன.
ஆனால், தற்போது உறுப்புநாடுகள் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை அந்தந்த நாடுகளின் உள்ளூர் நாணயங்களிலேயே மேற்கொள்வதை வலுப்படுத்துவதில்தான் முழுக் கவனம் செலுத்தப்படுகிறது என்றும், பொது நாணயம் தொடர்பான முன்மொழிவு எதுவும் இல்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.





