தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த இரு தொகுதி எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக, திமுக மற்றும் த.வெ.க சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) வேட்பாளரும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் பெயர்கள் செப்.15 அன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

த.வெ.க அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், தற்போது இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை கம்யூ. கட்சிகள் அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.