கிரீஸைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், 22 ஆண்டுகளாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருமுட்டையை கர்ப்பப்பையில் செலுத்தியதன் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். நீண்ட காலம் உறையவைத்த கருமுட்டை மூலம் குழந்தை பிறந்தது அரிதான நிகழ்வாகக் கவனம் பெற்றுள்ளது.
அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரிப்பு சிகிச்சை (ஐ.வி.எப்.) மேற்கொண்டபோது உருவான சில கருமுட்டைகளை ஆய்வகத்தில் உறைநிலையில் சேமித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பிறந்த அவரது ஒரே மகன், சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மகனை இழந்த துயரத்தில் இருந்தபோதும், 22 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டிருந்த கருமுட்டையை மீண்டும் பயன்படுத்தி குழந்தைப் பேறு பெற அவர் முடிவு செய்தார்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பும் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் துணையும் காரணமாக பிரசவம் வெற்றிகரமாக முடிந்தது. 22 ஆண்டுகள் உறைநிலையில் வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் குழந்தை பிறந்தது மருத்துவ உலகில் மிக அரிதான சாதனையாக பார்க்கப்படுகிறது.
‘மகன் மறைந்தாலும், அவனது உடன்பிறப்பாக இந்த மகள் என் வாழ்வை மீண்டும் ஒளிரச் செய்திருக்கிறாள்’ என்று அந்தத் தாய் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.





