இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் 242 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் இன்னும் கணக்கில் வராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு ஜாவா மாகாணத்திலிருந்து போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் பகுதியை நோக்கி ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற கப்பல் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.

ஜாவா கடலை கடந்து சென்ற போது பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் கப்பலின் தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், கப்பல் தலைகுப்புற கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் கிடைத்ததும் இந்தோனேசிய கடலோரக் காவல் படை மற்றும் தேசிய தேடுதல்-மீட்பு அமைப்பினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 102 பேரை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்துள்ளனர். மாயமானவர்களை கண்டறிய ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ரோந்து படகுகள் மூலம் தேடுதல் தொடரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.