லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.) தலைவர் மாயாவதி, தனது சகோதரரின் மகன்களான ஆகாஷ் ஆனந்த் மற்றும் இஷான் ஆனந்த் ஆகியோருக்கு கட்சியில் எந்தப் பதவியும் அல்லது பொறுப்பும் வழங்கப்படாது என அறிவித்துள்ளார். கட்சியில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், பி.எஸ்.பி. நிறுவனர் கன்சிராம் வழியில் தாம் எப்போதும் வாரிசு அரசியலுக்கு எதிராக உறுதியாக நின்று வருவதாக மாயாவதி கூறினார். தனது இளைய சகோதரர் ஆனந்த் குமார் கட்சிப் பணிகளில் உதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அந்த நிலையை சாதகமாக்கி அவரது மகன்கள் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது என மாயாவதி தெரிவித்தார். இனி ஆகாஷ், இஷான் இருவருக்கும் சிறியதோ பெரியதோ எந்தப் பொறுப்பும் வழங்கப்படாது; இது தன் இறுதி முடிவும் சபதமும் எனவும் அவர் கூறினார்.
மேலும், அவர்களது எதிர்கால வாரிசுகளுக்கும் கட்சியில் இடமில்லை என அவர் தெரிவித்தார். ஆனந்த் குமாருக்கு உதவி தேவைப்பட்டால், சட்டம் படித்து வரும் அவரது மகள் தீபிகா ஆனந்தின் உதவியை நாடலாம் அல்லது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த விசுவாசமான கட்சித் தொண்டருக்கு அந்தப் பொறுப்பை வழங்கலாம் எனவும் மாயாவதி கூறினார்.
கட்சியை விட தனிப்பட்ட பாசத்திற்கு முன்னுரிமை அளிப்பதை தாம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் வலியுறுத்தினார்.





