புதுடில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவுரையில் பிரதமர் நரேந்திர மோடி, கருத்துகள் மற்றும் உறுதிமொழிகளைத் தாண்டி, அமைப்பிடமிருந்து உறுதியான பலன்களை உலகம் இப்போது எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார்.

பிரிக்ஸ் தனது மூன்றாவது தசாப்தத்தில் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில், கூட்டு முயற்சிகள் மூலம் இந்த எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். அடுத்த உச்சிமாநாட்டை நடத்தவுள்ள சீனாவிற்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்கள் நடந்த கலந்துரையாடல்கள், பிரிக்ஸ் என்பது நாடுகளின் கூட்டமைப்பு மட்டுமல்ல; தீர்வுகளை வழங்கும் ஒரு “சூழலமைப்பு” என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியதாக மோடி கூறினார். உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டில்லி பிரகடனம், பொதுவான தொலைநோக்கு பார்வைக்கும் எதிர்கால ஒத்துழைப்புக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், எட்டிய முடிவுகள் அனைத்தையும் களத்தில் உண்மையான தாக்கத்தை உருவாக்கும் வகையில் காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என்றும், அவை ஆவணங்களாக மட்டும் நின்றுவிடாமல் நடைமுறை பலன்களை உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

18வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நிறைவடையும் வேளையில், தலைவர்களின் தீவிர பங்கேற்புக்கும் மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அவர்களின் கருத்துகள் ஒத்துழைப்பிற்கு பரந்த மற்றும் ஆழமான பரிமாணங்களை அளித்ததாகவும், பிரிக்ஸ் அமைப்பின் வளர்ந்து வரும் முக்கியத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை இது பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.