டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச முடிவெடுக்கும் அமைப்புகளில் “குளோபல் சவுத்” எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனக் குறிப்பிட்டு, அதனை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
வளர்ந்து வரும் நாடுகள் பிறர் வகுத்த விதிகளை ஏற்றுக்கொள்வதிலேயே நிற்காமல், உலகளாவிய விதிகளை உருவாக்கி வழிநடத்துபவர்களாகவும் மாற வேண்டும் என்றார். இதற்காக, பிரிக்ஸ் அமைப்பின் வாயிலாக இளம் தூதர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு பேச்சுவார்த்தை திறன், நடைமுறை பயிற்சி, சட்ட அறிவு போன்ற திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
உலகளவில் பல நெருக்கடிகள் உருவாகும் போது அதன் தாக்கத்தை முதலில் எதிர்கொள்ளும் முன்வரிசையில் குளோபல் சவுத் நாடுகள் இருப்பினும், முடிவுகள் எடுக்கப்படும் இடங்களில் பின்வரிசையில் தள்ளப்படுவதாக மோடி சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு நாட்டின் குரலும் பிரதிபலிக்க வேண்டும்; ஒவ்வொரு உறுப்புநாட்டுக்கும் பங்களிப்பு இருக்க வேண்டும்; மனிதகுல வளர்ச்சியே முயற்சிகளின் மையமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
உலக அமைப்புகளின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளுக்கான 10 அம்ச சீர்திருத்தத் திட்டத்தை அடுத்த பிரிக்ஸ் மாநாட்டுக்குள் உருவாக்க வேண்டும் என மோடி பரிந்துரைத்தார். இதை “பிரிக்ஸ் சீர்திருத்த செயல்திட்டம்” என்ற பெயரில் உருவாக்கி, பிரதிநிதித்துவம், செயல்பாட்டுக்கான பொறுப்பு, விதி உருவாக்குதல் ஆகிய மூன்று அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இரண்டு நாள் மாநாடு தலைநகர் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக மக்கள் தொகையில் சுமார் 40% பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிக்ஸ் கூட்டமைப்பு, 2024ல் ஆறு நாடுகள் இணைந்ததன் மூலம் மேலும் விரிவடைந்துள்ளது.





