‘நெல் வயலை விற்று, சொல் வயலை உருவாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்’ என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் பேச்சாளருமான சுமதி தெரிவித்தார். தினமலர் தொடக்கத்திற்காக செய்யப்பட்ட தியாகத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
சென்னையில் நடைபெற்ற ‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற தலைப்பிலான அரசியல் அரங்கத்தை அவர் ஒருங்கிணைத்து நடத்தினார். அப்போது, பத்திரிகையை தொடங்குவதற்காக ராமசுப்பையர் ஒரே நாளில் தன்னுடைய விவசாய நிலங்களையெல்லாம் விற்றதாக அவர் கூறினார்.
நெல் வயல்கள் பல போகங்களை தரும்; ஆனால் ஒரு நாளிதழ் நாள்தோறும் ‘ஒரு போகத்தை’ தரும் அளவுக்கு தொடர்ச்சியாக இயங்க முடியும் என அவர் குறிப்பிட்டார். 75 ஆண்டுகளாக ஒரு பத்திரிகை நிலைத்திருக்க கடுமையான உழைப்பும், தலைமுறை தலைமுறையாக கனவை எடுத்துச் செல்லும் முயற்சியும் காரணம் என கூறி, தினமலர் குடும்பத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
கட்சி சார்பு இருக்கிறதா என்பதைக் காட்டிலும், ஒரு செய்தி வந்தபோது அதில் எப்படியான நிலைப்பாடு எடுக்கப்படுகிறது என்பதே முக்கியம் என சுமதி கூறினார். தினமலர் செய்திகளில் கட்சி சார்பான நிலைப்பாட்டை எடுத்ததில்லை என்றும், சில காலகட்டங்களில் எடுத்த நிலைப்பாடுகள் உடன்பாடில்லாத கட்சிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தினமலரின் முதல் தலையங்கத்தை மேற்கோள் காட்டி, திருவிதாங்கூர் தமிழர்களின் நலனுக்காக பாடுபட வேண்டிய கடமை மற்றும் தமிழினத்திற்கு துரோகம் செய்பவர்களை எதிர்ப்பது போன்ற நோக்கங்களை நிறுவனர் முன்கூட்டியே தெளிவுபடுத்தியிருந்தார் என அவர் கூறினார்.





