புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டில் நடைபெற்ற லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்; அவரது அணி இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தது. சில்வர்ஸ்டோனுக்கு வந்த முதல்வரை அங்குள்ள லண்டன் வாழ் தமிழர்கள் சந்தித்து செல்பி எடுத்தும், ஆட்டோகிராப் பெற்றும் மகிழ்ந்தனர்.
பந்தயத் தளத்தில் அஜித்தை நேரில் சந்தித்த முதல்வர் விஜய், வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து, லீ மேன்ஸ் கோப்பை பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்; அஜித்துக்கு கைகொடுத்து வாழ்த்தி, கார் அருகே அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகர திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் முன்னணி உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட சில்வர்ஸ்டோன் வளாகத்தை முதல்வர் பார்வையிட்டு, சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களை வணிக ரீதியாகவும் திறம்படவும் இயக்கும் நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள உள்ளார்.
பந்தய முடிவில் அஜித்குமாரின் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 44 அணிகள் பங்கேற்றன.





