கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் தற்போது சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ. அரசு அமைந்துள்ளது. நீண்ட காலமாக ஆட்சி செய்த திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தோற்கடித்து அவர் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
முதல்வராகிய பின் சுவேந்து அதிகாரி காவி உடை அணிந்து வருவதுடன், பல சாமியார்களுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்துடன் ஊர்வலம் நடத்தினார். இதை முன்வைத்து, மேற்கு வங்கம் உத்தரப் பிரதேச மாதிரியாக மாற்றப்படுகிறதா என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மம்தா பானர்ஜி முதல்வராக இருந்த காலத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பப்படுவதையே அவர் விரும்பவில்லை என்ற பின்னணியில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மாநில சிறுபான்மையினரிடையே அச்சம் உருவாகியுள்ளது.
இதற்கு பதிலளித்த சுவேந்து அதிகாரி, தாம் எந்தச் சிறுபான்மையினருக்கும் எதிரானவர் அல்ல என்றும், ஆனால் ஹிந்து தொடர்பான விஷயங்களை தொடர்ந்து பேசுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அடுத்த மாதம் கொல்கட்டாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்திற்கு பெரிய விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இடதுசாரி மாணவர் சூழல் அதிகம் உள்ளதாக கூறப்படும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் தன்மையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டமாக, அந்த பல்கலைக்கழகத்திற்கு தத்துவஞானியும் சுதந்திரப் போராட்ட வீரருமான அரவிந்தரின் பெயரை சூட்ட முயற்சி நடப்பதாகவும், இதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.





