டில்லி பயணத்தின் முடிவில் தனது கார் டிரைவருக்கு நேரில் கைகுலுக்கி நன்றி தெரிவித்த அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செப்டம்பர் 12, 13 தேதிகளில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்குப் பதிலாக இளவரசர் ஷேக் காலித் பங்கேற்றார்.

இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். வர்த்தக விரிவாக்கம், எரிசக்தி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, நிதி ஒத்துழைப்பு மற்றும் மேற்கு ஆசியாவின் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் இதில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வைரலான காட்சிகளில், விமான நிலையத்தில் காரிலிருந்து இறங்கி அதிகாரிகளை வாழ்த்திய இளவரசர் விமானத்தை நோக்கி நடக்கத் தொடங்குகிறார். அப்போது டிரைவருக்கு நேரில் நன்றி சொல்லவில்லை என்பதை உணர்ந்து உடனடியாக திரும்பி வந்து, காரின் அருகே சென்று டிரைவருக்கு கைகுலுக்கி தனது நன்றியைத் தெரிவிக்கிறார்.

இந்த எளிய மனிதாபிமானமான செயல் இணையவாசிகளின் மனங்களை வென்றதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.