வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறை மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், தவறான திசையில் வளர்ச்சி சென்றால் மனிதகுலத்துக்கே பெரிய ஆபத்து ஏற்படலாம் என முன்னணி நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்த விவாதத்தில், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய், ஆபத்து “நிச்சயம்” என்று நிர்ணயிக்க முடியாது; நிறுவனங்களும் அரசுகளும் எடுக்கும் முடிவுகள் எந்த பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதே முக்கியம் என்றார். சரியான பாதையில் சென்றால் விபரீதம் நிகழும் வாய்ப்பு குறைவாக இருக்கும்; தவறான பாதையில் சென்றால் அது அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றி விலகிய ஜேக்கப் காக்சன், 2030க்குள் ஏ.ஐ. மனிதர்களை அழிக்கக்கூடும் என்று உருவாக்குபவர்கள் உண்மையாகவே நம்புகின்றனர் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பேசிய அமோடெய், காக்சனின் கவலையுடன் பெருமளவில் உடன்படுவதாகவும், அவர் குறிப்பிட்டது ஆந்த்ரோபிக் குறித்து அல்ல; ஒட்டுமொத்த ஏ.ஐ. துறையின் வேகமான முன்னேற்றம் குறித்தே என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், வளர்ச்சியை மெதுவாக்கினாலும் தவறான நபர்களின் கைகளில் இந்த தொழில்நுட்பம் சென்றால் அபாயம் அதிகரிக்கலாம் என எச்சரித்த அமோடெய், ஏ.ஐ. துறையும் உலக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
பாதுகாப்புக்கான மூன்று முன்னுரிமைகளையும் அவர் முன்வைத்தார்: வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கு முன் பாதுகாப்பை உறுதி செய்தல், சுதந்திரமான மதிப்பீட்டாளர்கள் மூலம் ஏ.ஐ. அமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்வது, மற்றும் உலக நாடுகள் இணைந்து பொதுவான விதிமுறைகள் மற்றும் தரநிலைகளை உருவாக்குவது. முன்னணி ஏ.ஐ. வளர்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கு ஓபன் ஏ.ஐ. நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஆதரவு தெரிவித்ததுடன், சுதந்திர மதிப்பீட்டாளர்களை நியமிப்பது குறித்து ஓபன் ஏ.ஐ.-யில் ஆலோசனைகள் நடப்பதாக கூறினார். எலான் மஸ்க் கூட அமோடெயின் கருத்தை ஆதரித்தார்.





