அரசு விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

நவி மும்பை சிட்கோ கண்காட்சி மையத்தில் நடைபெற்ற ஹிந்தி திவாஸ் கொண்டாட்டம் மற்றும் 6வது அகில இந்திய ராஜ்பாஷா மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் அவர் இதை கூறினார். ஹிந்தி தினமும் விநாயகர் சதுர்த்தியும் ஒரே நாளில் வந்திருப்பதை மங்களகரமானதாக குறிப்பிட்ட அவர், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு தடைகள் நீங்க விநாயகர் அருள்வார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

வரலாற்றை நினைவுகூர்ந்த அமித் ஷா, 1893ஆம் ஆண்டில் பால கங்காதர திலகர் மஹாராஷ்டிராவில் கணேஷ் உத்சவ் மற்றும் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி போன்ற பொதுக் கொண்டாட்டங்களை தொடங்கியதாக கூறினார். நாட்டின் படைப்புத்திறன், கலாசாரம், வரலாறு குறித்து விழிப்புணர்வை உருவாக்க கலாசார தேசியவாதம் முக்கியம் என்பதை திலகர் உணர்ந்திருந்ததாகவும் அவர் பேசினார்.

அடிமைப்பட்ட காலத்தில் இந்திய உணர்வைத் தூண்ட பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக ‘வந்தே மாதரம்’ உருவானதாக அமித் ஷா கூறினார். அது சுதந்திர வேட்கையையும், இந்திய கலாசார தேசியவாதத்தின் அடித்தளத்தையும் வலுப்படுத்தியதாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் முழுமையாக ஏற்கப் போராட்டங்கள் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பின்னர் அரசு விழாவில் அந்தப் பாடலை மீண்டும் முழுப் பெருமையுடன் முழுமையாகப் பாடிய ஒரே பிரதமர் மோடி எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ‘வந்தே மாதரம்’ 150வது ஆண்டு தொடர்பும், சத்ரபதி சிவாஜியின் பூமியில் நடைபெற்ற இந்த ஹிந்தி மொழி நிகழ்ச்சியும், வரும் நாட்களில் இரண்டையும் முன்னோக்கி நகர்த்தும் என அமித் ஷா கூறினார்.