பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக, வரும் செப்டம்பர் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மக்கள் தங்கள் வீடுகளில் ‘ஆசீர்வாத தீபம்’ ஏற்ற வேண்டும் என பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த அழைப்பு பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவர் பொது வாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலம் பொதுநல சேவைகள் மேற்கொள்ளும் இயக்கத்தை பாஜ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட வீடியோவில், “மக்களுக்கு சேவையாற்றுவது நாட்டிற்கு சேவையாற்றுவதற்குச் சமம்” என்பதே பிரதமரின் வாழ்க்கை வழிகாட்டும் கொள்கை என நிதின் நபின் கூறினார். பொதுச் சேவை மற்றும் தேசக் கட்டமைப்பில் அர்ப்பணிப்புடன் நீண்ட காலமாக அவர் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோடியின் தொலைநோக்கு தலைமையால் நாட்டிற்கு புதிய வாய்ப்புகளும் வலிமையும் கிடைத்துள்ளதாகவும், 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதை முன்னிட்டு செப்.17 அன்று தீபம் ஏற்றி ஆசீர்வாதம் வழங்குமாறு மக்கள் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒரு மாத கால நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.