நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளராக பணியாற்றிய திஷா சலியான் மரணம் தொடர்பாக சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தை மறைத்ததாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திஷா சலியான் 2020 ஜூன் 8 அன்று மும்பை புறநகர் மாலாத் பகுதியில் உள்ள உயரமான கட்டடத்தின் 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, 2020 ஜூன் 14 அன்று நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

திஷா சலியானின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கொலை, கூட்டு பலாத்காரம், குற்றச் சதி, ஆதாரங்களை அழித்தல், பொய் தகவல் வழங்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள எப்ஐஆரில், குற்றத்தை மறைக்க நடந்ததாக கூறப்படும் சதியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சிலர் முக்கிய பங்காற்றியதாக குற்றச்சாட்டு இடம் பெற்றுள்ளது. வழக்கு ஆவணங்களை அழித்தல், அரசு ஆவணங்களில் மோசடி, அரசு நிதி தவறான பயன்பாடு, குற்றவாளிகளை பாதுகாக்க போலீஸ் இயந்திரத்தை தவறாக பயன்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆதித்ய தாக்கரே, தினோ மோரியா, சூரஜ் பஞ்சோலி, நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை தாமதப்படுத்தியதாக கூறப்படும் டாக்டர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.