புதுடில்லி: மாணவர் விடுதி கட்டடம் இடிந்து ஏழு பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டில்லி முழுவதும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தினர்.

சத்ய நிகேதன் பகுதியில் மாணவர்கள் விடுதியாக செயல்பட்ட, சுமார் 50 ஆண்டுகள் பழமையான ஐந்து மாடி கட்டடம் செப்டம்பர் 6 அன்று திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் கட்டுமானத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் டில்லி முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு, செப்டம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெற்ற சோதனைகளில் 67 கட்டடங்கள் சட்டவிரோதமாக அனுமதியின்றி கட்டப்பட்டவை என கண்டறியப்பட்டது.

கண்டறியப்பட்ட கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். மேலும் ஒன்பது கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. நஜப்கர், வடக்கு ஷஹ்தாரா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இடிப்புகள் நடந்ததாக கூறப்படுகிறது.