மெக்சிகோவின் சால்டிலோ நகரில் நடைபெற்ற ஹூண்டாய் வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா ஆண்கள் ரிகர்வ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வில்வித்தை வரலாற்றில் முக்கிய சாதனை படைத்தார்.

செப்.13 அன்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை தீரஜ் 6-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஐந்து செட்கள் முடிவில் 5-5 என சமநிலை ஏற்பட்டதால் சூட்-ஆப் நடத்தப்பட்டது. இதில் 25 வயதான ராணுவ வீரரான தீரஜ் 10 புள்ளி எய்த, நகானிஷி 9 புள்ளி மட்டுமே எடுத்ததால் தங்கம் தீரஜ் வசமானது.

இந்த வெற்றியுடன், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண்கள் ரிகர்வ் வில்வித்தை வீரர் என்ற பெருமையை தீரஜ் பெற்றார். மேலும், 2010-ல் எடின்பர்க்கில் ஜெயந்தா தாலுக்தார் வெண்கலம் வென்றதற்கு பிறகு, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பதக்க மேடையை எட்டிய முதல் இந்திய ஆண்கள் ரிகர்வ் வீரரும் இவரே.

ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் ஆவார். இதற்கு முன்பு 2007-ல் டோலா பானர்ஜி மகளிர் ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த தீரஜ், காலிறுதியில் துருக்கியின் ஒலிம்பிக் பதக்க வீரர் மெட்டே பெர்கிம் துமரையை 7-1 எனவும், அரையிறுதியில் பிரான்சின் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீரர் ஜீன்-சார்லஸ் வல்லடோன்டை 7-1 எனவும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.