15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில் திருத்தப்பட்ட புதிய வரைவு மசோதாவை பிரான்ஸ் அரசு ஐரோப்பிய ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. குழந்தைகள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாவதைத் தடுப்பதும், அவர்களின் மனநலனைப் பாதுகாப்பதும் இதன் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.

இதற்கு முன், இதேபோன்ற கட்டுப்பாட்டை கொண்டு வர பிரான்ஸ் அரசு முயன்றது. கடந்த ஜனவரியில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில், 15 வயதுக்கு கீழுள்ளவர்கள் இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னாப்சாட், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடையிடும் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால், கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, கடந்த ஆகஸ்டில் அந்நாட்டின் அரசியல் சாசன கவுன்சில் அந்தச் சட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து சட்டச் சிக்கல்களை நீக்கி, ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய வரைவு திட்டத்தை மேக்ரான் தலைமையிலான அரசு உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு புதிய வரைவு தயாராகி, அது ஐரோப்பிய ஆணையத்திற்கு முறைப்படி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அதற்குள் பிரான்சில் இந்தத் தடையை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பிரான்சில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதுபோன்ற சட்டம் அமலுக்கு வர வேண்டும் என மேக்ரான் வலியுறுத்தி வருகிறார். குழந்தைகள் பாதுகாப்பை முன்னிட்டு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இதுதொடர்பாக உரையாற்ற உள்ளதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.