லண்டன் தேம்ஸ் நதிக்கரையில், வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் முதன்முறையாக ‘கங்கை ஆரத்தி’ நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் நதிக்கரையில் திரண்டனர் என தெரிவிக்கப்பட்டது.
சின்மயா மிஷன் அமைப்பின் 75வது ஆண்டு உலகளாவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘டோட்டலி தேம்ஸ்’ திருவிழாவுடன் இணைத்து ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கங்கை நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சி பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும் உலகப்புகழ் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. அதே போன்ற ஆன்மிகச் சூழலை லண்டனிலும் உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
சின்மயா மிஷன் லண்டன் கிளையின் ஆசிரியர் பிரம்மச்சாரிணி ஸ்ரீப்ரியா சைதன்யா கூறுகையில், பல தலைமுறைகளாக மக்கள் கங்கை நதிக்கரையில் ஒன்று கூடி நதிக்கும், இயற்கைக்கும், உயிர்களைத் தாங்கி நிற்கும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக ஆரத்தி அர்ப்பணித்து வருவதாக குறிப்பிட்டார். அதே உணர்வோடு தேம்ஸ் நதிக்கரையிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், லண்டனில் வாழும் இந்தியர்களிடையே இது பெரும் நெகிழ்ச்சியுடனும் வரவேற்புடனும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.





